Saturday, September 27, 2008

தியானம்

அம்பத்தேழு வயசு கணவன்
சர்க்கரை வியாதியால்
செத்து போனதுக்கு
வாயையும் வயிற்றையும்
அடித்துக்கொண்டு
அழும் மனைவி,
“என் ராசாவ
எடுத்து போனதுக்கு பதிலா
தொண்ணுத்தி மூணு
வயசுலயும்
கல்லு மாதிரி இருக்குற
அவர் அம்மா போயிருக்கலாமே…”
என்கிற புலம்பலை....
டிவி நாடகங்கள் பார்க்காமல்,
கதை சொல்லி,
நிலா சோறு ஊட்டி,
நடக்க கத்து கொடுத்த
பாட்டியா பத்தி
பேசுறது கேட்டு
பதறுகிற
பேரக் குழந்தைகளுக்கு
தெரிய வில்லை
ஐம்புலன்களையும்
அடக்கி
தியானம் பயின்ற
பாட்டியின் காதில்
கடும் சொற்கள்
விழ போவதில்லை என....
Thanks to http://www.vaarppu.com/view.php?poem_id=1524

Friday, August 22, 2008

விடியலை நோக்கி…

மேகக் மூட்டங்களாக

குழப்பங்களே நகர்ந்துக் கொண்டிருக்கின்றன…

கலங்கிய மனதை

திசைதிருப்ப போராடி

தோற்றுபோகின்றன

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்

திரைப்பட பாடல்களும்

புத்தகங்களும்

செல்பேசி குறுந்தகவல்களும்…


பாச்சை, பல்லி, கொசு

இவற்றோடு

நள்ளிரவில் ஏதோ ஒரு பறவை

மனதை வருடும்

ராகம் இசைத்து

இசைக் கச்சேரியை

மெருகூட்டி

அழைத்து செல்கிறது

விடியலை நோக்கி…
Murugan Subbarayan

Friday, August 1, 2008

அருங்காட்சியகத்தில் நான்

கடிதம் கொடுக்க வரும் போது
நலம் விசாரிக்கும்
அஞ்சல் அலுவலர்
வருவதில்லை
எல்லா கடிதங்களும்
மின்னஞ்சலுக்கே
வந்துவிடுகின்றன.


அறிவுரை வழங்கும்
வங்கி அதிகாரியை
சந்திப்பதில்லை
பணம் எடுப்பதும் போடுவதும்
தெரு முனையில் இருக்கும்
தானியங்கி இயந்திரத்திலேயே
முடிந்து விடுகிறது.

மின் கட்டணம் செலுத்துவது
வீட்டு பொருட்கள் வாங்குவது
இதர எல்லாமே
இணையம் மூலமே...

என்னை பாட வைத்த
சிட்டுக் குருவிகளும்
வருடி செல்லும் வேப்ப மரக்காற்றும்
இங்கில்லை.

உயிருள்ள நடைபிணமாக
அருங்காட்சியகத்தில் வைக்க
தயாராக நான்...
Thanks http://www.thinnai.com/?module=displaystory&story_id=308073112&format=html

Wednesday, July 30, 2008

நான் யார்?

யாருடையோ நிழலாம் நான்
சில நேரங்களில்
தாத்தா பாட்டி
பல நேரங்களில்
அப்பா அம்மா
ஆசிரியர் நண்பன்
இப்படியாக…

நகல்களை கிழித்தெறிந்து
நான் நானாக
கடக்க முயன்ற என்னை
திமிரானவன்
பைத்தியம்
என்கிற
முகமூடிகளை அணிவித்து
காறி உமிழ்ந்து
தூக்கிலிட படுகிறேன்…

சாம்பலை மீன்கள் திண்ற
மூன்றாம் நாள்
எனது புகைப்படத்துக்கு
தங்க பதக்கம் அணிவித்து
கருத்தரங்கில்
ஆய்வு கட்டுரைகள்
சமர்ப்பிப்பதை
மீன் தொட்டியிலிருந்து
பார்க்கிறேன்
மீன் குஞ்சுகளாக…
Murugan Subbarayan

Thanks http://www.vaarppu.com/padam_varikal.php?id=25

Saturday, July 5, 2008

நகர வாழ்க்கை

ஆடு மாடு மேச்சி
உளுந்து பயறு புளி காய வச்சி
அம்மி குடக்கல் உரல் பயன் படுத்தி
அப்பளம் வடவம் போட்டு
கம்பு கேழ்வரகு
பழைய சாதம் ஊறுக்காய் சாப்பிட்டு
வாசல் பெருக்கி
அடுப்பு மொழுவி
வெத்தலை போட்டு பழகியவளுக்கு.....

மிக்சி கிரைண்டர் குக்கர்
ஃபிஸா பெப்சி
அஞ்சு நாளைக்கு
தேவையானத சமச்சி
ஃபிரிட்ஜ்-க்குள் வச்சு
டிவி பாத்துட்டே
புழுக்கமான ஃபேன் காத்துல
சாப்பிட்டு தூங்கி
தூங்கி சாப்பிட்டு
இந்த வேகமான
நகர நரக வாழ்க்கை பிடிக்காமல்.....

கிராமத்துக்கு பஸ்
ஏத்திவிடுரா மொவனே
என்கிறாள் அம்மாக்காரி.

~ ambal murugan
Thanks to Vaarppu
http://vaarppu.com/view.php?poem_id=1477