Wednesday, July 30, 2008

நான் யார்?

யாருடையோ நிழலாம் நான்
சில நேரங்களில்
தாத்தா பாட்டி
பல நேரங்களில்
அப்பா அம்மா
ஆசிரியர் நண்பன்
இப்படியாக…

நகல்களை கிழித்தெறிந்து
நான் நானாக
கடக்க முயன்ற என்னை
திமிரானவன்
பைத்தியம்
என்கிற
முகமூடிகளை அணிவித்து
காறி உமிழ்ந்து
தூக்கிலிட படுகிறேன்…

சாம்பலை மீன்கள் திண்ற
மூன்றாம் நாள்
எனது புகைப்படத்துக்கு
தங்க பதக்கம் அணிவித்து
கருத்தரங்கில்
ஆய்வு கட்டுரைகள்
சமர்ப்பிப்பதை
மீன் தொட்டியிலிருந்து
பார்க்கிறேன்
மீன் குஞ்சுகளாக…
Murugan Subbarayan

Thanks http://www.vaarppu.com/padam_varikal.php?id=25

Saturday, July 5, 2008

நகர வாழ்க்கை

ஆடு மாடு மேச்சி
உளுந்து பயறு புளி காய வச்சி
அம்மி குடக்கல் உரல் பயன் படுத்தி
அப்பளம் வடவம் போட்டு
கம்பு கேழ்வரகு
பழைய சாதம் ஊறுக்காய் சாப்பிட்டு
வாசல் பெருக்கி
அடுப்பு மொழுவி
வெத்தலை போட்டு பழகியவளுக்கு.....

மிக்சி கிரைண்டர் குக்கர்
ஃபிஸா பெப்சி
அஞ்சு நாளைக்கு
தேவையானத சமச்சி
ஃபிரிட்ஜ்-க்குள் வச்சு
டிவி பாத்துட்டே
புழுக்கமான ஃபேன் காத்துல
சாப்பிட்டு தூங்கி
தூங்கி சாப்பிட்டு
இந்த வேகமான
நகர நரக வாழ்க்கை பிடிக்காமல்.....

கிராமத்துக்கு பஸ்
ஏத்திவிடுரா மொவனே
என்கிறாள் அம்மாக்காரி.

~ ambal murugan
Thanks to Vaarppu
http://vaarppu.com/view.php?poem_id=1477

Friday, July 4, 2008

மாய உலகம்

வெள்ளி கிழமை
மட்டும் சாமி படத்துக்கு
பூ மாலை போடுகிறாள்
எதிர் வீட்டுப் பெண்.

கதவு தாழ்ப்பாளில்
பூக்காரன் வைத்து
செல்லும் பூப்பொட்டலம்
காய்ந்தே போகிறது
மற்ற நாட்களில்.

பூவுக்கும் தெரிவதில்லை
சாமிக்கும் தெரிவதில்லை
அந்த பெண்ணுக்கு
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே
பாசி மணி
பிளாஸ்டிக் நரம்பினால்
பூ மாலை செய்யவே
நேரம் சரியாய் இருக்கு என.....

Ambal Murugan

Thanks to www.thinnai.com
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30807038&format=html